
காற்றை கிழித்துக்கொண்டு சீறி பழகிய என் கார்
முதல் தடவையாக
மண்ணில் விழுந்து கிடந்த
கார் முகிலை விலக்கிக்கொண்டு பறந்தது.
வைகறை பனி இன்று
வரலாற்றை உடைத்து உறைநிலையில் உள்ளதாய்
இந்த குளிரிலும் குரல் பிசகாத
வானொலி மாமா சொல்லிக்கொண்டிருந்தார்.
பொலித்தீன் பைகளால் சுற்றிக்கட்டிய
மின் வண்டுகள் போல தெரிந்த
வீதிவிளக்குகள் தன்னால் இயன்ற தூரத்துக்கு
வெளிச்சத்தை உந்திக்கொண்டிருந்தன.
பிரார்த்தனை மண்டபத்தில்
வகுப்பாசிரியருக்கு அஞ்சி அகவணக்கம் செலுத்தும்
மாணவர்களை போல அசைவற்று
உறைந்து நின்ற மரங்களில் பனி ஒழுகிக்கொண்டிருந்தது.
ஆங்காங்கே மரங்களிலிருந்து சருகுகளில் வீழ்ந்து
தம் சுயத்தை தொலைத்து
தற்கொலை செய்துகொள்ளும்
பனித்துளிகளின் இறுதி ஓசைகள் கேட்டவண்ணமே இருந்தன.
விபத்துகள் வந்துவிடக்கூடாது என்ற எதிர்பார்ப்புடன்
அநியாயத்துக்கு இடைவெளிவிட்டு
ஊர்ந்து சென்ற சில கார்களினால்
வீதிகள் ஓரளவுக்கு அவ்வப்போது நிரம்பியிருப்பதாக தெரிந்தது.
எல்லா உணர்வுகளையும் போலியாக மறந்து
போர்வைகளுக்குள் தமது
கடைசி சொட்டு கனவுகளை கழிப்பதில்
மனிதங்கள் தீவிரமாகிக்கிடந்தன.
முன்னிரவின் காமம்
இறுகிய அணைப்புக்களில் இளைப்பாறி கிடந்தது
இரவின் உடலை பகல்
மென்மையாக விழுங்கிக்கொண்டிருந்தது
எனது கார் தொடர்ந்து பனியை கிழித்துக்கொண்டு
பயணித்துக்கொண்டிருந்தது
இக்கவிதையை மனதில் கோர்த்தபடி!