இது 2000 ஆம் ஆண்டு ஜுலையில் நடைபெற்ற சம்பவம் ...
கொக்குவில் நாச்சிமார் அம்மன் கோவிலிலிருந்து கலட்டிச்சந்திக்கு போகும் வீதியிலுள்ள பளுதூக்கும் பயிற்சி நிலையத்தில் பயிற்சி செய்துவிட்டு வீடு திரும்பிய சஞ்சீவன் என்ற யாழ் இந்துக்கல்லூரி மாணவன் ஸ்ரீலங்கா இராணுவத்தினரால் மறித்து விசாரணை என்ற பெயரில் கூட்டிச்செல்லப்பட்டார்.அருகிலிருந்த வீதியொன்றினுள் இழுத்துச்சென்று அங்கு அவரை விசாரித்த இராணுவம் அவர் இடுப்பில் கட்டியிருந்த பட்டி குறித்து விசாரித்தது.அது பளுதூக்கும்போது தான் அணியப்பயன்படுத்துவதாக சஞ்சீவன் கூறியபோதும் அது குறித்து அசட்டைசெய்யாமல் இராணுவம் அவரை தாக்கியது.மூர்க்கமாக தாக்கிய வேகத்தில் மூர்ச்சையுற்று கீழே விழுந்த மாணவன் அந்த இடத்திலேயே உயிரிழந்தான்.அப்பகுதியால் அப்போது வந்த பாடசாலை அதிபர் ஒருவரும் இன்னொருவரும் சமபவத்தை நேரில் பார்த்த குற்றத்துக்காக படையினாhல் ஏற்றிச்செல்லப்பட்டு மிரட்டப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
நடந்த சம்பவம் இதுதான்.
அடுத்த நாள் காலை வேலைக்கு நான் சென்றபோதுதான் எனக்கு விஷயம் தெரியவந்தது.சஞ்சீவனின் சடலம் இன்னும் பெற்றோரிடம் ஒப்படைக்கப்படவில்லை என்றும் யாழ் ஆஸ்பத்திரிக்கே தற்போதுதான் கிடைத்துள்ளது என்றும் அலுவலகத்தில் தகவல் அடிபட்டது.
அப்போது என்னுடைய ஆபத்பாந்தவராக இருந்தவர் பத்திரிகையாளர் நிமலராஜன்.(இவர்தான் பின்னர் குடாநாட்டில் அவரது வீட்டில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஆவார்)உடனடியாக தொடர்ப்புகொண்டு விஷயத்தை கூற, விண் போல பாய்ந்து வந்து நாம் வழக்கமாக சந்திக்கும் சிவன்கோவிலுக்கு முன்புள்ள சண்முகம் கடையில் காத்திருந்தார்.
'பொடி ஆஸ்பத்திரியில்தான் கிடக்குதாம்.அதைப் படமெடுத்தா பெடியனுக்கு ஆமி அடித்த அடியை சனத்துக்கு வடிவா படத்திலேயே போட்டுக்காட்டலாம்" என்ற யோசனையுடன் என்னையும் ஏற்றிக்கொண்டு ஆஸபத்திரிக்கு விரைந்தார் நிமலராஜன்.நேரே சவச்சாலைக்கு சென்றோம்.(இதே சவச்சாலைக்கு பின்னர் ஒருகாலத்தில் நான் நிமலராஜனின் சடலத்தை பார்க்கச்சென்றிருந்தேன் என்பது வேறு கதை.அதை இப்போதைக்கு விடுவம்)
அங்கு வாசலில் பல மருத்துவபீட மாணவர்கள் குழுமி நின்று நடுவில் ஏதோ ஒன்றை வைத்து ஆராய்ந்தவண்ணமிருந்தனர்.நாங்கள் இருவரும் அவர்களுடன் சங்கமித்து எட்டிப்பார்த்தால் நடுவில் ஒரு இளைஞனின் சடலம்.அங்கு ஒருவரிடம் விசாரித்ததில் அதுதான் சஞ்சீவனின் சடலம் என்றும் அறியவந்தது.
பிறகென்ன பேப்பருக்கு படம் கிடைக்கப்போகிறது என்று பெரும் சந்தோஷம்.சோதனையை முடித்துக்கொண்டு மாணவர்கள் வெளியேற,வாயிற்காவலருக்கு கருணை மனுக்கொடுத்து விட்டு ஆமி சுட்ட சடலத்தை நாங்கள் எமது கமராவால் சுட்டுக்கொண்டு ஓட்டமும் நடையுமாக ஆஸ்பத்திரி வாசலுக்கு வந்தோம்.
அந்தநேரம் பார்த்து பின்னால் கைதட்டி எம்மை ஒருவர் அழைத்தார்.திரும்பிப்பார்த்தால் அவர்தான் பிரேத பரிசோதனை அதிகாரி.அருகில் போனபோது எம்மை யார் எவர் என்று விசாரித்துவிட்டு அடையாள அட்டையை காண்பிக்குமாறு கேட்டார்.நாங்கள் அடையாள அட்டையை காண்பித்தநேரம் பார்த்த அவற்றை பிடுங்கிக்கொண்டு நேரே ஆஸ்பத்திரி ஆணையாளரின் அறைக்குள் சென்றவர்.அரைமணிநேரமாக வெளியே வரவில்லை.நாங்களும் ஜாமீன் கைதிகள் போல வெளியே நின்று கொண்டிருந்தோம்.
சிறிதுநேரத்தின்பின்னர் வெளியே வந்தவர் உள்ளே வரும்படி அழைத்தார்.உள்ளே சென்ற எமக்கு உபதேசத்துடன்கூடிய ஒரு உத்தரவு.
அதாவது அனுமதி இன்றி சவச்சாலைக்கு வந்தது தவறு என்றும் இனிமேல் வருவதாக இருந்தால் பத்திரிகையாளர்கள் அனுமதிபெற்றே வரவேண்டும் என்றும் கடும் கட்டளை பிறப்பிக்கப்பட்டது.
ஏதோ கமராவை பறி;க்கப்போகிறார்கள் படமெடுத்தது தெரிந்துவிட்டது என்று பதறியபடி இருந்த எமக்கு நடந்த சம்பவம் புஸ் என்றாகிவிட்டது.
பிறகென்ன அடுத்தநாள் பத்திரிகையில் பிரசுரித்த அந்தப்படம் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆதாரமாகும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
அதற்கப்புறம் 2 மாதங்களாக நான் ஆஸபத்திரிப்பக்கம் போகவில்லை.
1 comments:
என்ன அருணன் நீங்க பலே ஆளுதான்ப்பா.
நீங்கள் முக்கியமான ஒரு காலகட்டத்தில் செய்தவற்றை காட்சிப்படுத்துகிறீர்கள். மேலும் அறிந்துகொள்ள ஆர்வமா இருக்கிறது.
அதுசரி உங்களுடைய கட்டுரையை வாசிக்கும்போது நீங்கள் தமிழ்நாட்டவரோ என்று யோசித்தேன்.
//நாங்களும் ஜாமீன் கைதிகள் போல வெளியே நின்று கொண்டிருந்தோம்.//
உங்கள் அனுபவங்களை தொடர்ந்து எழுதுங்கள். .
Post a Comment