வணக்கம்!
இந்த இணையத்துக்கு இட்ட நாமம் ஆழிப்பேரலையின் அக்கிரமத்துக்கு முன்னர் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை இத்தால் உறுதி செய்து கொண்டு என் மனதில் இன்னமும் நீங்காமல் காதல் செய்துகொண்டிருக்கும் ஒரு சில நினைவுகளுக்கும் எனக்கும் நடைபெற்ற மகரந்தச்சேர்க்கையில் உருவான மழலைகளை இங்கு இறக்கி விடுகிறேன்.
பாடசாலை நாட்களை முடித்துக்கொண்டு எவருமே (நானும் கூட) எதிர்பாராதவாறு பத்திரிகைத்துறைக்குள் நுழைந்த அந்த நாட்களில் இடம்பெற்ற பல சம்பவங்கள் ஏனோ தெரியவில்லை இன்னும் என் நெஞ்சில் கனதியாக இருந்துகொண்டிருக்கிறது.
2000 ஆம் ஆண்டு மே மாதம்.
ஓயாத அலைகள் 3 சமர் மூலம் விடுதலைப்புலிகள் குடாநாட்டின் நுழைவாயிலுக்கு வந்து அரியாலையில் நின்றுகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கை பற்றி சிந்தித்துக்கொண்டிருந்தார்கள்.யாழ்ப்பாணத்தில் அகப்பட்ட இராணுவம் என்ன செய்வது என்று தெரியாமல் இனித்தான் ஏதோ வெட்டி விழுத்தப் போறவர்கள் போல நகர எல்லைக்குள்ளிலிருந்து மக்களை இடம்பெயர்ந்து செல்லுமாறு கூறிவிட்டது.வழக்கம்போல இன்னொரு இடப்பெயர்வுக்கு ஆயத்தமான யாழ் மக்கள் சாரி சாரியாக வலிகாமம் பிரதேசத்துக்குள் தஞ்சம் புகுந்தார்கள்.
குடாநாட்டின் வேலியில் சண்டை நடந்துகொண்டிருந்ததால் தகரத்தில் தேங்காய் விழுந்தது போல எறிகணை சத்தம் காதைக்கிழித்தது.எமக்கான அப்போதைய ஒரே செய்திவழியாக இருந்த வானொலியையே கேட்கமுடியாத அளவுக்கு எறிகணை சத்தம் ஒவ்வொன்றும் இடிபோல இருந்தது.(சிந்தித்து பாருங்கள் களத்தில் போராடியவர்களுக்கு எப்படியிருந்திருக்குமென்று)இதனால் பீதியடைந்த நாம் எமது ஆசிரியர் பீடத்தை மேல்தளத்திலிருந்து கீழ்தளத்துக்கொண்டு வந்தோம்.சுற்றிவர காகித மூட்டைகளை அடுக்கிவிட்டு நடுவிலே இரண்டு மூன்று மேசைகளைப்போட்டு அங்கிருந்து வேலை செய்தோம்.ஒரு எறிகணை வந்து விழுந்தால்கூட அத்தனையும் தூள் தூள்.ஆனால் அப்போதைக்கு அது எமக்கு திருப்தியான அரணாக இருந்தது.
இத்தகைய ஆபத்து வலயத்துக்குள் அலுவலகம் இருந்தபோதும் அபாயத்தை நேரடி அஞ்சல் செய்வேண்டும் என்ற வைராக்கியத்துடன் பணியாற்றினோம். வெளியில் ஊரடங்குச்சட்டமாதலால் அலுவலகத்துக்குள்ளேயே தொடர்ந்து நான்கு நாட்கள் வேலைச்சிறை.வழக்கமாக 15 பேர் பணி புரியும் ஆசிரியர் பீடத்தில் என்னுடன் சேர்த்து மூவர் மட்டுமே.இந்த விகிதாசாரத்தில் தான் ஏனைய துறைகளிலும்.ஆகவே அலுவலகம் பூராகவும் மொத்தம் 15 பேரளவில் மட்டுமே.பத்திரிகைகளை அதிகாலை பதித்த பின்னர் எமது அலுவலகப் பின்வளவினூடாகவும் சில குறுக்குப்பாதைகளினூடாகவும் அவற்றைக் கொண்டு செல்லும் எமது ‘ஹீரோக்கள்’ கலட்டி சந்தி அல்லது தட்டார் தெரு சந்தி ஆகியவற்றுக்கு அப்பால் எமது விநியோகஸ்தர்களிடம் சேர்ப்பித்துவிடுவார்கள்.அதற்கு அப்பால் அன்றைய புதினத்தை அறிய ஆவலுடன் இருக்கும் மக்கள் அந்த புதினத்தாள்களை தமது விதி அறிக்கை போல விழுந்தடித்து வாசிப்பார்கள்.
இந்த ஒரு துணிகரப்பணியில் நாம் ஈடுபட்டு வந்தபோது அவ்வப்போது அப்பகுதியால் செல்லும் இராணுவ வாகனங்கள் தமக்கே உரிய பாணியில் எமது அலுவலகத்தையும் அதன் செயற்பாடுகளையும் நோட்டமிட்டுச்செல்வர்.
இவ்வாறு எமது பணி தொடர்ந்துகொண்டிருந்தது.
2000 ஆம் ஆண்டு மே 19 ஆம் திகதி.மாலை 6.30 மணியிருக்கும்
வாயிலில் நின்ற காவலாளி வந்து “அண்ண பொலிஸ் வந்திருக்குது.ஆசிரியரை வரட்டாம்” என்றான்.எம்முடன் அப்போதிருந்த ஆசிரியர் பேனையை மூடி வைத்துவிட்டு வாசலுக்கு சென்றார்.சிறிது நேரத்தில் எமது அலுவலகத்துக்கும் திபு திபு என்று சுமார் 50 பொலிஸ் இராணுவம் மற்றும் பலர் நுழைந்தார்கள்.அவசரகாலச்சட்டத்தின் கீழ் அரசால் பிரகடனப்படுத்தப்பட்ட பிரசுர கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியதற்காக காலவரையறையின்றி பத்திரிகை நிறுவனத்தை சீல் பண்ணப்போவதாக அவர்களில் வந்த மூத்த அதிகாரி தெரிவித்தார்.
அவர்களுடன் ஏற்கனவே வாசலில் வாக்குவாதப்பட்ட எமது ஆசிரியர் எதுவுமே செய்யமுடியாமல் பெற்ற பிள்ளையை கைது செய்ய வந்திருப்பவர்களை பார்ப்பது போல அந்த சீருடைக்காரர்களை பார்த்து செய்வதறியாமல் திகைத்துப்போய் நின்றார். அலுவலகத்துக்குள் புகுந்த பொலீஸார் நாம் எழுதிய கடதாசிகள் முதற்கொண்டு பேனா, வானொலி சகலதையும் தனித்தனி பைகளில் போட்டு அடைத்தார்கள்.எங்கள் எல்லோரையும் அலுவலத்தை விட்டு வெளியேறி வாசல் பக்கம் போகுமாறு கூறிவிட்டு அலுவலக கதவுகள் சகலதையும் அடைத்து சீல் இட்டார்கள்.ஈற்றில் வாயில் கதவையும் சீல் செய்து தமது வேலைகள் அனைவற்றையும் தாமே வீடியோ பதிவும் வெய்து கொண்டார்கள்.
சுமார் எட்டு மணியளவில் உள்ளே நுழைந்தவர்கள் தமக்கு கிடைத்த உத்தரவுப்படி அனைத்தையும் கனகச்சிதமாக செய்துமுடித்துவிட்டு மூன்று மணி நேரத்தில் சென்று விட்டார்கள்.வாசலிலிருந்த மரத்துக்குக்கீழ் இரவு முழுவதுமிருந்த நாம்,விடிகாலையில் வீடு சென்றோம்.
எமது அலுவலகத்திலிருந்து அன்றைய தினம் ஒரே ஒரு செய்திதான் மக்களுக்கு சென்றது. ஜனநாயகத்தின் குரல் வளையையே நெரிப்பது போல இடம்பெற்ற இந்த செயல் இன்றும் ஈழத்தமிழர் வரலாற்றில் அழியாத காலச்சுவடு.
இவ்வாறு இழுத்து மூடப்பட்ட பத்திரிகை அலுவலகத்தை ஜுலை மாதமளவில் அரசு மீள இயங்க அனுமதித்தது.
இன்னமும் நெஞ்சில் நிழலாடும் நினைவு.
தொடரும்…
1 comments:
இப்ப தான் உங்கட பதிவப் பாத்தன். சுவாரசியமா இருக்கு. தொடர்ந்து எழுதுங்கோ.
Post a Comment