Saturday, April 02, 2005

நெஞ்சாங்கட்டை

நெஞ்சை விட்டு அகலாத நெஞ்சாங்கட்டை...

'நெஞ்சாங்கட்டை' என்ற சொல்லு பலருக்குத் தெரியுமோ தெரியவில்லை. அதுபற்றிய மனது மறக்க முடியாத ஒரு பதிவை இங்கு எழுத முன்னர் இந்தச்சொல்லு குறித்த ஒரு வியாக்கியானம். பலருக்கு இது தெரிந்திருக்கும் சிலருக்கு இந்த சொற்றொடர் புதியதாக இருக்கும். ஆகவே அது குறித்த ஒரு முத்தாய்ப்பு.

அதாவது இறந்தவர்களின் சடலத்தை எரிக்கும்போது அந்தச் சடலத்தின் நெஞ்சுப்குதியில் ஒரு கனமான மரகட்டையை வைப்பதுண்டு. ஏனெனில் சடலம் எரியத்தொடங்கியதும் உயர்வெப்பநிலையில் எலும்புகள் முறுக்கேறி தம்பாட்டுக்கு வளைந்து நெளிந்து திமிறி சிலவேளை சடலம் எழும்பி உட்கார்ந்துவிடும் நிலைக்கே வந்துவிடும். இதற்காக பன்னெடுங்காலமாக பின்பற்றப்பட்டுவரும் முறைதான் நெஞ்சாங்கட்டை. அடக்கம் செய்யப்படும் சடலத்துக்கு இந்த முறையெல்லம் பின்பற்றப்டுவதில்லை. எரிக்கப்படும் சடலத்திற்கு மாத்திரமே.

இந்த நடைமுறை எனக்கு தெரிந்திருந்தபோதும் - அதை பலமுறை சுடலைகளில் கண்டிருந்தபோதும் - அண்மையில் நெல்லியடியில் நான் பார்த்த சம்பவம் இன்னும் மனதில் இழையோடியவாறு உள்ளது. அது யாருடைய சடலமும் அல்ல சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஐ.நடேசனுடையதே. அந்த சம்பவத்தை முழுமையான பின்னணியுடன் இங்கு தருகிறேன்.

2005 ஆம் ஆண்டு மே 31 ஆம் திகதி காலை.
வழமைபோல் அலுவலகம் சென்று அன்றைய பத்திரிகைகளை அசிக்கொண்டே வாய்க்கு தேனீர் கோப்பையால் ஒத்தடம் கொடுத்துக்கொண்டிருந்தேன். தொலைபேசி அழைப்போன்று.
மறுமுனையில் “நடேசன் அண்ணையை சுடடுப்போட்டாங்களாம்!” என்றொரு குரல். இடி விழுந்தமாதிரி இருந்தது. என்னடா இது முதல் நாளும் எடுத்து தனது கட்டுரைவிஷயமாக கதைத்தவர். பதறியபடி
காயமோ அல்லது…..!” என்று இழுத்தேன்.
இல்ல அந்த இடத்திலேயே ஆள் சரி” என்று பதில். மட்டக்களப்பில் ஏதாவது நடந்தால் அடுத்த நிமிடம் தொடர்புகொண்டு செய்தியை அச்சொட்டாக தருபவர் நடேசன். அன்று அவரையே சுட்டுவிட்டதால் அந்த செய்தியை யாரிடம் கேட்பது என்று குழப்பம். ஒருவாறு செய்தி ஊர்ஜிதப்படுத்தப்பட்ட பின்னர், நானும் இன்னும் சில எமது அலுவலக பத்திரிகையாளர்கள் மற்றும் அலுவலர்கள் என அனைவரும் அவரது இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்ளப் புறப்பட்டோம்.

யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த அவருடைய சொந்தஇடமான நெல்லியடியில்தான் இறுதிக்கிரியைகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது. சடலத்தை மட்டக்களப்பிலிருந்து ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்குக் கொண்டுவல்வதாக ஏற்பாடு. கிளிநொச்சியில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டு பின்னர் அங்கிருந்து நெல்லியடிக்கு எடுத்தச்செல்லப்ட்டது. வன்னி மக்கள் சாரிசாரியாக வந்து அஞசலி செலுத்தினர். புலிகளின் அரசசியல்துறைப்பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வன், நீதி நிர்வாகத்துறைப் பொறுப்பாளர் பரா, கல்வித்துறைப் பொறுப்பாளர் இளங்குமரன் உட்பட புலிகளின் பல முக்கியஸ்தர்கள் அஞ்சலி செலுத்தினர்.
நெல்லியடியில் மக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்ட பின்னர் அங்குள்ள மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது. உடலுக்குத் தீ வைத்த பின் அனைவரும் சுடலையை விட்டு வெளியேறி விட்டனர். வெட்டியானும் நானும் சில பத்திரிகையாளர்களும் அங்கு நின்று கொண்டிருந்தோம். அப்போது சிதையில் எரிந்துகொண்டிருந்த நடேசனின் இரண்டு கைகளும் திடீரென திமிறிக்கிளம்பின. அவை இரண்டும் எரிந்து உருகிக்கொண்டிருந்தன. எம்முடன் நின்றுகொண்டிருந்த புகைப்படப் பிடிப்பாளருக்கு இதை விட்டால் என்ன வேலை? உடனே அதைத் தனது கமராவால் சுட்டுக்கொண்டார்.

பிறகு அங்கு விசாரித்தபோது “சடலத்தின் நெஞ்சுக்கு குறுக்காக கட்டைவைப்பதே வழமை. ஆனால் நடேசனின் சடலத்துக்கு மாறி வைத்துவிட்டார்கள் போல கிடக்கு. அதுதான் கைகள் வெப்பமேறியவுடன் வெளியே கிளம்பியிருக்கின்றன” என்று அங்கு நின்றுகொண்டிருந்த பெரியவர் சொன்னார். ஆனால் வெட்டியானிடம் விசாரித்தபோது "நெஞ்சாங்கட்டையே வைக்கவில்லை இங்கு அது கட்டாயமில்லை.” என்றான்.

பின்னர் நாம் வாகனத்தில் ஏறுவதற்காக நடந்து வரும்போது, நடேசன் பற்றிக்கதைத்துக்கொண்டு வந்த இன்னொரு பத்திரிகையாளர் “நடேசன் அண்ணா நெஞ்சுரம் மிக்கவர். அதுதான் அவருக்கு நெஞ்சாங்கட்டை வைக்கவில்லை. தான் இறந்தாலும் தனது எழுத்துக்களும் கைகளும் என்றும் எழுந்து நிற்கும் என்பதையே நடந்த சம்பவம் காட்டுகிறது.” என்றார்.

2 comments:

Anonymous said...

எழுதிக்கொள்வது: Thamilvaanan

//இன்னொரு பத்திரிகையாளர் “நடேசன் அண்ணா நெஞ்சுரம் மிக்கவர்.அதுதான் அவருக்கு நெஞ்சாங்கட்டை வைக்கவில்லை.தான் இறந்தாலும் தனது எழுத்துக்களும் கைகளும் என்றும் எழுந்து நிற்கும் என்பதையே நடந்த சம்பவம் காட்டுகிறது.” – என்றார்.//

பத்திரிகையாளர்களும் அரசியல்வாதிகள் என்று சொல்ல வருகிறீர்களா?


0.39 5.4.2005

அருணன் said...

நன்றி தமிழ்வாணன்!