Saturday, April 09, 2005

பொறுக்கிகள்

சின்னப்பிள்ளையள் முத்திர சேக்கிறது,சிப்பி சோகி சேக்கிறது மிஞ்சி மிஞ்சிப்போன உண்டியலில காசு சேக்கிறது எண்டு கேள்விப்பட்டிருப்பியள்.ஆனா எங்கட காலத்தல நாங்கள் அப்ப ரி.56 துவக்கிண்ட தோட்டா சேக்கிறது எண்டா வலு பேமஸ்.(அவ்வளவுக்கு அங்க மலிஞ்ச சமான் அது எண்டேக்க நினைச்சுப்பாருங்கோ எங்கட நிலைமைய)

ஆனா வீட்ட கொண்டுவந்தா துலைஞச்சுது.“உந்த கோதாரியள ஏனடா வீட்ட கொண்டாறனியள்.றோட்டிலேயே எறிஞ்சிட்டு வாங்கோவன்.வெடிக்க கிடிக்க போகுது” எண்டு அம்மா கத்திற கத்தலில அதைச்சுட்டவனே சத்தம் கேட்டு வந்திடுவான்.

அந்த வெற்றுத்தோட்டா சேத்தா பிறகென்ன பலதும் தரும் கற்பக தரு மாதி நாங்கள் அதை கன விளையாட்டுக்கு பாவிக்கிறது.ஆனால் சைக்கிள் சாவிக்கு கீற்றக் ஆகப் போடிறதும் பேனைக்குப்பின்னால் அடைஞ்சுவிடுறதும் அப்போது பேமஸ்.

வகை தொகையா தோட்டாக்கள அள்ளினவ தங்க வீட்டு பூங்கண்டுகளுக்கு முன்னால வரிசையா நிலத்தில பதிச்சு அழகு பாப்பினம்.சிலபேர் தங்கட மாடுகளுக்கு மணி கட்ட அதப்பிரியோசனப்படுத்துவினம்.

எங்கட ஆக்களுக்குத்தான் ஒரு சாமானக்காட்டினாப்போதுமே.பிறகென்ன.அதில ஒரு ஆராச்சியே நடத்திப்போடுவினம்.

சீமெந்து தட்டுப்பாடா இருந்த காலத்தில சக்கரையச்சேத்து வீடு கட்ட கண்டுபிடிச்சது.

பெற்றோல் தட்டுப்பாடான காலத்தில மோட்டச்சைக்கிளுக்கு மண்ணெண்ணை விட்டு பிறகு ரின்னரை ரியூப்பில விட்டு ஊதி ஊதி ஓடுறது.(இப்படி ஓடிப்போற ஆக்கள புதுசாப்பாக்கிறவயள் மனுசன் ஏதோ காத்தை ஊதித்தான் மோட்டச்சைக்கிள் ஓடுது எண்டு நினைப்பினம்)

சோப்பு தட்டுப்பாடன காலத்தில பனங்காய்களி போட்டு உடுப்பு தோய்க்க கண்டுபிடிச்சது.(இப்படி தோச்சு காயப்போட்ட சில உடுப்புகளை கொடியில இருந்து மாடு தூக்கிக்கொண்டுபோன கதையளும் நிறைய இருக்கு)

பேப்பர் தட்டுப்பாடான காலத்தில மட்டையிலயே முழுச்செய்திப்பத்திரிகையே வெளிவந்தது.(அதை பள்ளிக்கூடப்பிள்ளையள் பைல் கவரா பாவித்தவை)

சீனி தட்டுப்பாடான காலத்தில சக்கரையோட தொட்டு தொட்டு குடிக்கபழகீனது.(வீட்டுக்கு விருந்தாளியள் வந்தா, வீட்டுக்காரர் ஸ்டைலா ஒரு ட்ரேயில தேத்தண்ணியும் மற்ற தட்டல அஞசாறு பனங்கட்டி துண்டுகளும் வப்பினம்.வந்தவருக்கும் விஷயம் தெரியும்தானே.பிறகென்ன ஒரு வாய் தேத்தண்ணி பிறகு பனங்கட்டியில ஒரு நக்கு.இப்படியே அதை குடிச்சுமுடிக்கிறதெண்டா ஏதோ காச்சலுக்கு குடிநீர் குடிச்சமாதிரி)


இப்பிடி எத்தனையோ இன்னோரன்ன கண்டுபிடிப்புகளக்கண்டுபிடிச்ச எங்கட ஆக்களுக்கு வெற்றுத்தோட்டாவை குடுத்து என்ன செய்யவேணும் எண்டு சொல்லியே குடுக்கவேணும்.

இப்பிடித்தான் ரி.56 துவக்கிண்ட வெற்றுத்தோட்டாவை பேனைக்கு பின்னால இறுக்கிப்போட்டு வகுப்புக்கு கொண்டு வந்தான் பள்ளிக்கூடத்தில எனக்கு பக்கத்தில இருந்த பெடியன்.அண்டைக்கு வகுப்பில பாடத்தில கேள்வி கேட்டு எல்லாருக்கும் சப்பல் அடி.இந்த தோட்டாக்காரனிட்ட கேள்வியக்கேட்ட வாத்தியார் அவண்ட மேசையில அவன்ட பேனையப்பாத்திட்டு தூரநிண்டே சரி சரி இரு எண்டுட்டு மனுசன் ஏதொ வெடிச்சிடும் எண்ட பயத்திலயோ தெரியாது அடிக்காமயே போயிட்டுது.

9 comments:

Anonymous said...

எழுதிக்கொள்வது: கவி

பெற்றோல் தட்டுப்பாடான காலத்தில மோட்டச்சைக்கிளுக்கு மண்ணெண்ணை விட்டு பிறகு ரின்னரை ரியூப்பில விட்டு ஊதி ஊதி ஓடுறது.(

அப்ப ரியூப்புக்கு காற்று அடிக்கிறதில்லையா அருணன்.

எல்லாம் அறிய ஆவலாக இருக்கு.


கவி



15.35 9.4.2005

வசந்தன்(Vasanthan) said...

அருணன்!
கவிக்கு பதில் சொன்னீரெண்டா உம்மப்போல ஏமாளி இருக்க மாட்டான்.

Anonymous said...

எழுதிக்கொள்வது: Lingan

படிக்கக் கள்ளமடிச்சுப்போட்டு வெற்றுத் தோட்டாவைக் கொண்டுபோய் வாத்தியாரை வெருட்டினதுதான் உம்மட மிகப்பெரிய சாதனை. பலே கில்லாடி ஆளப்பா நீர். வெளிநாட்டில இந்தப் புலுடா சரிவராது. கவனமாகப் படியும்.

21.22 9.4.2005

Anonymous said...

எழுதிக்கொள்வது: சயந்தன்

மல்ரிபரல் குண்டில்த்தானே இருக்கைகள் செய்தது. நாலைஞ்சை ஒண்டா அடிக்கி அதில வாறவையை குந்த வைச்சது.

22.13 10.4.2005

மதி கந்தசாமி (Mathy) said...

நல்லா எழுதுறீங்க அருணன். பழைய பதிவுகளையெல்லாம் போய்ப் படிச்சிற்று வந்திருக்கிறன்.

தொடர்ந்து எழுதுங்க. உங்களைமாதிரி அனுபவம் இருக்கிறவை நிறைய எழுதோணும்.

//பெற்றோல் தட்டுப்பாடான காலத்தில மோட்டச்சைக்கிளுக்கு மண்ணெண்ணை விட்டு பிறகு ரின்னரை ரியூப்பில விட்டு ஊதி ஊதி ஓடுறது.(இப்படி ஓடிப்போற ஆக்கள புதுசாப்பாக்கிறவயள் மனுசன் ஏதோ காத்தை ஊதித்தான் மோட்டச்சைக்கிள் ஓடுது எண்டு நினைப்பினம்)
//

ரின்னர் எண்டா என்ன?

இதைப்பத்தியும் நீங்கள் எழுதியிருக்கிற நிறைய விசயங்கள் பற்றியும் கேள்விப்பட்டிருக்கிறன். அன்ரியின்ற உடுப்பை மாடு கொடியிலயிருந்து எடுத்தண்டு போயிற்றுது எண்டு சொன்னோடன ஒண்டும் விளங்காம முளிச்சதும் ஞாபகம் இருக்குது.

Anonymous said...

எழுதிக்கொள்வது: Lingan

50 கலிபர் துப்பாக்கியின் வெற்றுத் தோட்டாவில கத்திக்குப் பிடிபோடுற விடயத்தை விட்டிற்றியள்.

8.8 10.4.2005

வன்னியன் said...

ஆட்லறி வெற்றுக்கோதுகள தான் ஒரு நேரத்தில பள்ளிக்கூடங்களில கதிரையாப் பாவிச்சது. அடிப்பக்கத்த மேல விட்டு செங்குத்தா நட்டு வச்சிருப்பினம். அதிலதான் பிள்ளையள் இருந்து படிக்கிறது. சயந்தன் சொன்ன மல்ரி பரல் எல்லாம் பிறகெல்லோ வந்தது.
அதவிட ஆட்லறிக் கோதுகளை பூச்சாடியாப் பாவிக்கிறது. வடிவுக்காக நட்டு வக்கிறது. டாங்கி வெற்றுக்கோதுகளெண்டா இன்னும் பெறுமதிகூட. நல்ல உயராமாயிருக்கிற அதுகள் கிடைக்கிறது கஸ்டம்.

அருணன் சொன்ன மாதிரி வாத்தியளும் தாய்தேப்பனும் பயந்த காலம் இருந்ததுதான். ஆனா பிறகு வன்னியில இப்படியான நிலையில்ல. ஏனெண்டா கிட்டத்தட்ட எல்லாருக்கும் முழுமையான அறிவு வந்திட்டுது. பின்னயென்ன? எல்லாரும் தானே பயிற்சி எடுத்தவை. எல்லாரும்தானே எல்லைக்குப் போனவை.

ஈழநாதன்(Eelanathan) said...

அருணன் நல்லா இருக்குது.தொடர்ந்து எழுதுங்கோ.மதியக்கா ரின்னர் என்றா பெற்றோல் மாதிரி ஒரு எரிபொருள் பொதுவாக பெயின்ரைக் கரைக்க பாவிப்பினம்

அருணன் said...

பரவாயில்லை வெற்றத்தோட்டாவிலேயே நல்ல சண்டை நடக்கு போல.நான் சொன்;ன எங்கட ஆக்களிண்ட வீரதீரங்களுக்கு வசந்தன்,சயந்தன் போன்ற இணைய பண்டிதர்கள் மேலும் பசளை போட்டிருக்கினம்.இப்பிடித்தான் நினைக்க நினைக்க எத்தினியோ சொல்லலாம்.

மதி அக்கா,கவி,லிங்கன் ஈழநாதன் பின்னூட்டத்துக்கு நன்றி.தொடர்ந்து வாசியுங்கோ.