பள்ளிக்கூடத்தில பா ஓதல் பண்ணிசை எண்டு சும்மா ஆக்களில்லாத குறைக்கு மேடையில ஏறி இறங்கிப்பாடினதால ஆலையில்லா ஊருக்கு இலுப்பம் பூ சக்கரை எண்ட கணக்கில நான் பெரிய பாடகர் எண்ட நினைப்பு அங்க எல்லாருக்கும் இருந்தது.தமிழ்ச்சங்க விழா அது இது எண்டு எதிலையும் சும்மா ரெண்டு பாட்டைப்பாடி கைதட்டு வாங்கி அந்தப்பெயரை கனகாலமா தக்கவச்சுக்கொண்டிருந்தனான்.
பிறகும் எங்கட ஆக்கள் சும்மா இருக்கேல்ல.அங்க ஒரு கோஷ்டி இஞ்ச ஒரு கோஷ்டி எண்டு இழுத்து திரிஞ்சு பாட வக்கிறது வழக்கம்.நானும் விடுகிறதில்லை.கல்லெறி வாங்காத அளவுக்கு நைஸா குரல் குடுத்திட்டு வாறது.ஆனா பள்ளிக்கூடத்தை விட்டு வெளியேறினா பிறகு வேற இடங்களுக்கு போய் பாடிறது எண்டு வீட்டை தெரியாது. தெரிஞ்சா துலஞ்சுது. பிறகு அப்பர் வீட்டிலேயே பக்கவாத்தியம் வாசிக்க வெளிக்கிட்டுடுவார்
இப்பிடித்தான் ஒருக்கா சங்குவேலி பிள்ளையார் கோயிலுக்கு பக்கத்தில இருக்கிற வைரவர் கோயில் திருவிழாவுக்கு எங்கட ஆக்களிண்ட இசைக்கச்சேரி எண்டு அறிவிச்சாச்சு.பிறகென்ன நாலஞ்சு நாளா றியேஸல் நடக்குது.நானும் வீட்டை ஒவ்வொரு காரணத்தைச்சொல்லிப்போட்டு அங்க மைக்கை பிடிச்சிட்டு வாறது.
ஒருமாதிரி நிகழ்ச்சி நாளும் வந்திட்டுது.ப்ரோக்கிராம் லிஸ்டைப்பாத்தா எங்கட பாட்டு கிட்டத்தட்ட இரவு பத்துமணிக்குத்தான் வரும்போல கிடந்தது.சனத்தை தொடர்ந்து அரங்கத்தில வைச்சிறதுக்கு எப்பவும் இசைக்கச்சேரிய கடைசியாத்தான் வைக்கிறது வழக்கம்.ஆனா எனக்கு வயித்தக்கலக்க வெளிக்கிட்டுது. ப்ரோக்கிராமுக்கு இரவு வாறதுக்கு வீட்டில அப்பருக்கு எப்பிடி கையிறு விடுகிறது எண்டு தெரியேல்ல.
ப்ரோக்கிராம் நடந்த அதே நாளில மருதடிப்பிள்ளையார் கோயிலில மஞ்சத்திருவிழா வந்தது.அதைச்சாட்டி கொஞ்சம் லேட்டா வீட்டுக்குப்போனாலும் பத்துமணிக்கு தொடங்கிற நிகழ்ச்சிக்கு எப்பிடிப்போறது எண்டு எனக்குள்ள பெரிய சங்கடம்.ஏனெண்டா ஆமிப்பிரச்சினையால மிஞ்சி மிஞ்சிப்போனா ஒம்பது மணிக்குள்ள மஞ்சம் இழுத்து கோயிலே பூட்டிப்போடுவினம்.
சரி பூந்து விளையாடுவம் எண்டு போட்டு என்ர ‘இசையமைப்பளரிட்ட’ போய் என்ர பிரச்சினையச்சொன்னன்.பிள்ளையாருக்கு ஒரு பாட்டு இருக்கு.அதுக்கு அடுத்ததா உம்மடை பாட்டை போடுறன் எண்டு அவர் என்ர வயித்தில பாலை வார்த்தார்.
நிகழ்ச்சி தொடங்கீட்டுது.மேடையில் இசைக்கலைஞர்களை அறிவிப்பாளர் அறிமுகப்படுத்தினார்.கன நேரம் எதிர்பாத்திருந்த சனம் கைதட்டி விசிலடிச்சு ஒரே ஆரவாரம்.மேடைக்கு பி;ன்னால நிக்கிற எனக்கு அப்பரிண்ட முகம்தான் அடிக்கடி ஞாபகத்துக்கு வந்தது.
சரியெண்டு முதல்பாட்டு ‘பிள்ளையார் சுழிபோட்டு’ எண்டு பாட்டு தொடங்கிச்சுது.அப்ப ட்ரம்ஸ் வாசிச்சுக்கொண்டிருந்தவர் தேவையில்லாம ஓங்கி ஒரு அடிவிட்டார்.அவ்வளவுதான் ட்ரம்ஸ் வாசிச்ச குச்சி முறிஞ்சு ஒரு துண்டு முன்னால போய் விழுந்தது.பிறகென்ன சனமெல்லாம் “காய் கூய்” எண்டு கத்த ரெண்டொரு கல்லும் மேடைக்கு வந்திட்டிது.
அரங்கமே அல்லோல ‘கல்’லோலம். பிள்ளையார் சுழிபோட்டு பாட்டுக்கு ட்ரம்ஸ் தேவையே இல்லை.ஆனா எங்கட ஆள் தேவையில்லாம படம் காட்டப்போய் எல்லாம் பிளைச்சுப்போச்சு.
கச்சேரிக்காறரோ என்ன செய்யிறது எண்டு தெரியாம முழுச வெளிக்கிட்டினம்.
நானோ இது சரியான நேரம் எண்டுட்டு நைஸா பக்கத்து வீட்டில விட்ட சைக்கிளையும் எடுத்துக்கொண்டு வீட்டுக்கு பறந்திட்டன்.வழியில படுத்துக்கிடந்த நாய்கள்வேற என்னை வேகமா வீட்டைகொண்டுபோய் விட்டுட்டுது.
அடுத்தநாள் கேள்விப்பட்டன்.வேற ட்ரம்ஸ் ஸ்டிக் இல்லாம பக்கத்து வீட்டில அகப்பை காம்பை வேண்டி ட்ரம்ஸ் அடிச்சு மிச்ச கச்சேரிய நடத்தி முடிச்சவயளாம்.
2 comments:
எழுதிக்கொள்வது: http://uyirvaasam.blogspot.com
ஞாபகப்பதிவுகள் நன்றாகவே இருக்கின்றன அருணன். வாழ்த்துக்கள். உங்கடை அப்பாமாதிரி எங்கடை ஊர் அப்பாக்கள் கனபேர் இருக்கினம்.அதுதான் எங்களுக்குள்ளிருந்த பலதிறன்களை வெளியில் வராவிடாமல் தடுத்தது.
நல்லகாலம் அகப்பைக்காம்பாலை அடிவாங்காமல் தப்பீட்டியள்.
எண்டாலும் மருதடியைச் சாட்டி வெளிக்கிடுறதாலை மருதடியானின் அருள்தானோ தெரியவில்லை அகப்பைக் காம்புவரை போனது.
அன்புடன் சாந்தி
9.5 18.4.2005
எழுதிக்கொள்வது: Lingan
அதுசரி இது உண்மையோ இல்லைக கற்பனையோ? சத்தியமா உண்மையைச் சொல்லுங்கோ. நீங்களும் பாடுவியள் எண்டதைத்தான் கேட்கிறன்.
21.4.2005 அன்று 9.21 மணிக்கு பதிவுசெய்யப்பட்டது.
Post a Comment