Thursday, July 15, 2010

"நீயா நானா" வில் இடம்பெற்ற கசப்பான பொருட்குறிப்பு!


தமிழ் ஒளிபரப்புக்களத்துக்கு விஜய் டி.வி. நிகழ்ச்சிகள் இன்று புதிய பரிமாணத்தை வழங்கியிருக்கின்றன என்றால் மிகையில்லை. நேர்த்தியான பல நிகழ்ச்சிகளை ஜனரஞ்சக ரசனையுடன் மக்களுக்கு ஈர்ப்பை ஏற்படுத்தும் வகையில் தொகுத்தளித்து அந்த ஊடகம் தனது முயற்சியில் பெருவெற்றியீட்டியிருக்கிறது.

அந்த வகையில், சண் டி.வி.யில் ஒளிபரப்பாகிய 'விசுவின் அரட்டை அரங்கம்' ஒன்றே தமிழ் ஒளிபரப்புத்துறையில் மக்கள் விவாத அரங்குக்கான வரைவிலக்கணம் என்ற நிலை காணப்பட்டிருந்தபோது, விஜய் டி.வியின் நீயா நானா என்ற நிகழ்வு மக்கள் மத்தியில் பெருவரவேற்பை பெற்ற சிந்தனை உற்றாக வந்திறங்கியது.

தொகுப்பாளர் கோபிநாத்தின் அசகாயப் பேச்சாற்றலினாலும் திறன் மிக்க விவாத ஆற்றலினாலும் அந்த நிகழ்ச்சி கடல் கடந்த நாடுகளிலும் தமிழ்மக்கள் மத்தியில் விருப்பத்திற்குரிய ஒன்றாக பரந்து விரிந்திருக்கிறது.

அவ்வாறான ஒரு நிகழ்ச்சியில் அண்மையில் இடம்பெற்ற ஒரு சம்பவம் நெஞ்சை நெருடும் விடயமாகியிருக்கிறது. இது தொடர்பாக விஜய் டி.வி.க்கு நான் அனுப்பிய கடிதத்தினை கீழே தருகிறேன். அந்த கடிதம் இது பற்றி விரிவாக பேசும். இந்த கடிதத்துக்கு எந்த பதிலும் இல்லை. அதேவேளை, அடுத்தடுத்த 'நீயா நானா' நிகழ்ச்சிகளிலும் இது குறித்து எதிர்வினையை காணோம்.

அன்புடன் கோபிநாத் அவர்களுக்கு,

நிகழ்ச்சி தொகுப்பாளர் "நீயா நானா"
விஜய் டி.வி.

இம்மாதம் - ஜுலை - நான்காம் திகதி நடைபெற்ற உங்களது நிகழ்ச்சியில் தாய் - மகன் பந்தம் குறித்த உணர்வுபூர்வமான வாதப்பொருளை திறமையாக கையாண்டிருந்தீர்கள். பாசத்தின் வெளிப்பாட்டை தத்ரூபமாக வெளிக்கொண்டுவந்த நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், உங்களது வாதப்பொருளுக்கு ஆதாரமாக தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் குறித்த கருத்து ஒன்றை முன்வைத்திருந்தீர்களர்.

அதாவது,

"விடுதலைப்புலிகளை பற்றி ஆய்வு செய்த ஒரு ஆஸ்திரேலிய பெண், அவர்களுடைய தற்கொலை படையில் யாரெல்லாம் உடனடியாக சேருகிறார்கள் என்றால், தங்களது தலைச்சன் பிள்ளைகளை போரில் பறிகொடுத்தவர்கள் இருக்கிறார்கள் பாருங்கள்..சிங்களவர்களது தாக்குதல்களால், இலங்கை இராணுத்தினரின் தாக்குதல்களால் யாரெல்லாம் தனது மூத்த மகன்களை பறிகொடுத்தார்களோ, அவர்களெல்லாம் உடனடியாக தற்கொலை படையினராக மாறுகிறார்கள். காரணம் அவ்வளவு பெரிய இழப்பு. அவ்வளவுக்கு ஒரு பையன் - அம்மா உறவு மகத்தானது என்று அந்த ஆய்வில் குறிப்பிடுகிறார்."

என்று தெரிவித்திருந்தீர்கள்.

தமிழீழ கரும்புலிகள் தினமாகிய இன்று ஜுலை 5 ஆம் திகதி நீயா நானா நிகழ்ச்சியில் இந்த கருத்தை நீங்கள் கூறியதும், அது ஆழ்ந்த துயரை ஏற்படுத்தியிருக்கிறது.

நிகழ்ச்சியில் நீங்கள் கூறிய விடயத்தை உங்களது கருத்தாக முன்வைக்கவில்லை, அன்றைய நிகழ்ச்சியும் தமிழீழ விடுதலைப்புலிகள் பற்றிய விவாத அரங்கு இல்லை அதேவேளை நீங்களும் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கோ அல்லது தமிழ்மக்களின் போராட்டத்துக்கோ எதிரானவர் அல்ல என்பவற்றையெல்லாம் முழுமையாக ஏற்றுக்கொள்ளும் அதேவேளை -

தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலை படையில் இணைந்துகொண்டவர்கள், தலைச்சன் பிள்ளையை போரில் பறிகொடுத்தவர்களே என்று உங்களால் மேற்கோள் காட்டப்பட்ட அந்த கருத்து முற்று முழுதாக நிராகரிக்கப்படவேண்டியது என்பதை இங்கு கூறிக்கொள்ளவிரும்புகிறேன்.

உங்களால் கூறப்பட்ட கருத்து, தலைச்சன் பிள்ளையை போரில் பறிகொடுத்தவர்கள்தான் தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினர் என்று அந்த ஆஸ்திரேலிய பெண்மணியின் ஆய்வின் முடிவில் தெரிவித்துள்ளார் என்பது போன்ற வெளிப்பாட்டை ஏற்படுத்தியிருக்கிறது.

விடுதலைப்புலிகளின் தற்கொலை படையானது தமிழர்களின் போராட்ட வடிவத்தில் உயிராயுதம் என்று வர்ணிக்கப்பட்ட உன்னத வடிவமாகும். வார்த்தைகளில் வர்ணிக்க முடியாத தியாகமும் இனவாத அரசிடமிருந்து தமது மக்களை பாதுகாத்துக்கொள்வதற்கு ஒரு இனம் தன்னுடன் வரித்துக்கொண்ட உறுதியான கவசமும் ஆகும்.

அதனை பயங்கரவாதம் என்றும் தீவிரவாதம் என்றும் ஒற்றை சொற்களுக்குள் உலகம் வரைவிலக்கணப்படுத்திக்கொண்டாலும்கூட தமது கொள்கைக்காக ஆயிரக்கணக்கான உயிர்களை ஆகுதியாக வார்த்துக்கொண்ட ஒரு இனத்தின் விடுதலை வேட்கையையும் அவர்களது ஓயாத விடுதலை பயணத்தையும் உலகப்பொதுவிதிகளுக்குள் அடக்கி மாசுபடுத்த முடியாது.

அந்த வகையில், தமிழீழ விடுதலைப்புலிகளின் தற்கொலை படையினரில் இணைந்துகொண்டவர்கள் நீங்கள் கூறியதை போல சிங்கள அரசின் அடக்குமுறையின் உச்ச வலியினால் போராட்டத்தை நோக்கி உந்தப்பட்டவர்களர் ஆவர்.

இவ்வாறு சாவின் கணத்தை முன்னமே தெரிந்துகொண்டு போரில் சென்று தம்மை அர்ப்பணித்த மாவீரர்கள் யாவரும், நீங்கள் கூறியதைப்போன்று சிங்களப்படைகளின் உச்ச அடக்குமுறையின் வலியை தமது உடலின் ஒவ்வொரு நாளங்களிரும் சுமந்தவர்கள்.

- பெற்ற தாயை, சகோதரியை தம் கண்முன் சீரழித்த சிங்கள படைகளின் கொடூரத்துக்கு எதிராக புறப்பட்ட இளைஞர்கள்.

- குடும்பத்தையே கூண்டோடு வெட்டி சாய்த்த சிங்கள காடையர்களின் பயங்கரவாதத்துக்கு எதிராக புறப்பட்டவர்கள்.

- ஆண்டாண்டு காலமாக தன் சொந்த நிலத்தில் குடியிருக்க வழியின்றி வாழ்வையே தொலைத்த விரக்திக்கு எதிராக புறப்பட்டவர்கள்.

இப்படி ஆயிரம் ஆயிரம் உணர்வுகளின் உச்ச வெளிப்பாடாக ஈழத்தமிழினம் வெகுண்டெழுந்து உருவாக்கிய படைதான் இந்த தற்கொலைப்படை.

அந்த உணர்வுகளையும் அவர்களது தியாகங்களையும் அந்த உன்னதமானவர்களின் இலக்கினையும் கொச்சைப்படுத்துவதாக, அவர்களின் சாதனைகள் அரங்கேறிய காலத்தில் வாழந்துகொண்டுடிருக்கும் நாங்களே எந்த கருத்தினையும் முன்வைப்பது எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.

அதுவும், ஒரு தமிழனாக, இந்த விடயத்தில் ஆழமான புரிதல் இன்றி விமர்சனங்களை மிகப்பலமான ஊடகத்தில் முன்வைப்பது முற்றிலும் நிராகரிக்கப்படவேண்டியது.

தமிழ் ஊடக உலகில் பொதுமக்கள் கருத்துக்களை ஜனரஞ்சக ரசனை சொட்ட அருமையாகவும் அறிவுபூர்வமாக வெளியாகும் ஒரு நிகழ்ச்சிகளுக்கு மகுடம் வைத்தாற் போல் இடம்பெற்றுவருவது விஜய் டி.வியின் நீயா நானா. நீங்கள் கூறும் கருத்துக்கள் அடுத்த நிமிடமே உலகின் எந்த மூலையிலும் உள்ள தமிழனுக்கு சென்றடைந்துவிடுகிறது. அவ்வாறான ஆழமான - அர்த்தபுஷ்டியான - விவாதக்களம் நீயா நானா.

அவ்வாறான ஒரு நிகழ்வில், உண்மைக்கு புறம்பான அல்லது அதனை பிழையாக நீங்கள் விளங்கிக்கொண்ட கருத்தை முழுமையாக ஆய்வு செய்யாமல் முன்வைத்தமை ஈழத்தமிழன் ஒவ்வொருவனையும் ஆழ்ந்த வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.

அதனை கருத்திற்கொண்டு இனிவரும் காலங்களில், ஈழத்தமிழர்களின் போராட்ட வடிவங்கள் சம்பந்தப்பட்ட விடங்களை தெரிவிக்கும்போது சரியான ஆய்வுக்குட்படுத்தி அதுபற்றி தெரியாதவர்களுக்கு சரியான தெளிவினை ஏற்படுத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

நன்றி.

0 comments: