
திரைமொழி என்பது விசாலமானது. அதன் தாக்கம் அதை விட வீரியமானது. உயிருள்ள மற்றும் உயிரற்ற சகல விடயங்களையும் ரசிக்கவைக்கும் தகைமை திரைமொழிக்கு இருக்கிறது. அந்தவகையில், திரைப்படங்கள் என்ற வகையினுள் அடங்கும் முழு நீள சித்திரங்கள் பல்வேறு கருப்பொருட்களின் விம்பங்களாக மக்கள் மனங்களை ஆட்கொண்டுவருகின்றன.
இந்த திரைமொழிகளின் வடிவங்களும் காலத்துக்கு காலம் புதிய பரிமாணங்களின் ஊடாக தனது தாக்கங்களை மாற்றியமைத்திருக்கிறது. அந்த வகையில் 1910 களில் வட அமெரிக்க நாடுகளின் திரைவடிவங்களின் ஊடக பிரசவிக்கப்பட்டதுதான "குறும்படம்" என்ற புதிய மொழி. இரண்டு மூன்று மணி நேரத்திற்குள் கதைகளை கூறும் படைப்புக்களாக திரைப்படம் என்ற கலைவடிவம் மக்கள் மனங்களை ஆக்கிரமித்துக்கொண்டிருந்த காலப்பகுதியில் குறும்படம் என்ற புதிய திரைமொழி குறுகிய நேரத்தில் ஒரு செய்தியையோ தகவலையோ மக்களின் மனங்களில் ஆழப்பதிந்துவிடும் வல்லமை கொண்டவையாக உருவெடுத்தன.
சுமார் 20 நிமிடங்களிலிருந்து 40 நிமிடங்களுக்குள் எடுக்கப்படும் படங்கள் குறும்படம் என்ற வரைவிலக்கணத்திற்குள் அடங்குவதாக ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க திரைப்பட இயக்குனர்களின் ஆரம்பகால தெரிவிப்புக்கள் காணப்பட்டபோதும் அக்காலப்பகுதியில் நியூஸிலாந்தில் எடுக்கப்பட்ட திரைப்படங்கள் ஒரு நிமிடத்துக்கு கூடுதலாகவும் 15 நிமிடங்களுக்கு உட்பட்டதாகவும் இருந்தால் அவை குறும்படங்கள் என்ற தகுதியை பெற்றுவிடுவதாக அமைந்திருந்தன.
குறும்படங்கள் படைக்கப்பட்ட ஆரம்ப காலப்பகுதியில் ஒவ்வொரு விதமான வரைவிலக்கணங்கள் காணப்பட்டபோதிலும் அதன் வளர்ச்சியின் பாதையில், குறும்படங்களுக்கு இடையிலான திறன்சார் நிகழ்வுகளில் அவற்றை ஒழுங்கு செய்யும் திரைத்துறை நிறுவனங்கள் வரையறுத்து விதிகளுக்குள் குறும்படங்கள் எடுக்கப்பட்டபோது, அந்த பொதுவிதிகளுக்கு மதிப்பளித்த குறும்படங்கள் நேரத்தன்மையை தாமே எழுதிக்கொள்ளும் வல்லமையை பெற்றுக்கொண்டு, எதிர்கால குறும்படங்களுக்கும் அவை அளவுகோல்களாக மாற்றம்கொண்டுவிட்டன.
அந்தவகையில், பாரிஸில் அமைந்துள்ள சர்வதேச மிகக்குறுகிய படங்களுக்கான அமைப்பு ஒரு நிமிடமும் அதிலும் குறைவாகவும் எடுக்கப்பட்ட படங்களுக்கான நிகழ்வினை நடத்திவருகிறது. அதேபோன்று போன்று பிலிம் மினிட் என்ற அமைப்பு 2006 ஆம் ஆண்டு முதல் ஒருநிமிட திரைப்படங்களின் நிகழ்வு என்ற விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
இவையெல்லாம், குறும்படங்களின் தரத்தை உயர்த்துவது மாத்திரமன்றி, அது குறித்த ஆர்வம் கொண்டு இயக்குனர்களையும் பெரிய அளிவில் ஊக்குவித்தும் வருகிறது. இப்படியான, அளவுகோல்களுக்கு எதிராக தங்களது திரைத்திறனை முன்வைக்க முயற்சி செய்யும் இயக்குனர்கள், எவ்வளவுக்கு எவ்வளவு குறுகிய நேரத்தில் எவ்வளவு பெரிய செய்தியை தாக்கத்தை ஏற்படுத்தும்வகையில் ரசிகர்களிடம் எடுத்துச்செல்லலாம் என்ற பாதையின் ஊடாக தங்கள் பரிசோதனைகளை அமைத்துக்கொள்கிறார்கள்.
தமிழில் எடுக்கப்பட்ட பல குறும்படங்கள் சர்வதேச திரை விழாக்கள் வரை போட்டிக்கு சென்று தமது ஆற்றலையும் தகுதியையும் பறைசாற்றியிருக்கின்றன. மாதம் ஒன்றில் பல நூற்றுக்கணக்கான தமிழ் குறும்படங்கள் உலகெங்கும் தமிழர்கள் செறிந்துவாழும் பகுதிகள் மட்டும் அல்லாமல் யப்பான் மற்றும் சீனா போன்ற நாடுகளிலிருந்துகூட வெளிவந்துகொண்டிருக்கின்றன.
தமிழ் குறும்படங்கள் பல்வேறு கதைக்களங்களை தொட்டுச்சென்றுள்ளபோதிலும் தமிழீழத்தை மையமாக வைத்து வெளிவந்த பல குறும்படங்கள் உலகின் பல்வேறு மூலையிலுமுள்ள தமிழர்களுக்கு பலவிதமான உணர்வுகளை சுமந்த செல்லும் அபார ஊடகமாக விளங்கியவண்ணமுள்ளன.
குறிப்பாக ஈழத்தமிழர்களின் போராட்ட இலக்கியத்தை உலகளாவிய ரீதியில் செறிவினை பெறுவதற்கு நிதர்சனம் தொலைக்காட்சி பல்வேறு குறும்படங்களை தயாரித்திருக்கிறது. கவிதை, கதை போன்ற களங்களுக்கு அப்பால் காணாலி ஊடாக ஈழத்தமிழர்களின் பல்வேறு கனதியான உணர்வுகளை அனுபவங்களாகவும் செய்திகளாகவும் அவலங்களாகவும் இந்த குறும்படங்கள் மொழிபெயர்த்திருக்கின்றன. இந்த குறும்படங்கள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கும் வரலாறாக பதிவுசெய்யக்கூடிய ஆழமான உணர்வுகளை தன்னகத்தே கொண்டவையாக உள்ளன.
ஈழத்திலிருந்து வெளியான குறும்படங்களில் தமிழர் தாயகத்தின் சிறந்த படைப்பாளியும் தமிழ்த் தேசிய விடுதலைப் போராட்டத்துக்கு உரமூட்டியவருமான அளவெட்டியைச் சேர்ந்த ஞானரதன் என அழைக்கப்படும் வை.சச்சிதானந்தம் அவர்களின் பங்களிப்பு மகத்தானது. ஈழமண் இன்றும் போற்றும் மாமனிதர் அவர்.
இன்றைய சூழ்நிலையில், குறும்படங்களுக்கு பல தமிழ் அமைப்புக்கள் களம் அமைத்து கொடுத்து படைப்பாளிகளுக்கு செயலூக்கமளித்து அவர்களுக்கு கரம் கொடுத்து வருகின்றன. உலகெங்கும் பல தமிழ் அமைப்புக்கள் மற்றும் ஊடகங்களும்கூட குறும்படங்களுக்கு சிறந்த பாதையை வகுத்தளித்து அதனை ஒரு புதிய திரைமொழியாகவும் புதிய வழியிலான ஊடகமாகவும் உருவாக்கிவருகின்றன.
அந்த வகையில், கலைஞர் தொலைக்காட்சியில் கடந்த சில மாதங்களாக தொகுத்தளிக்கப்பட்ட நாளைய இயக்குனர் என்ற நிகழ்ச்சியில் குறும்படங்களுக்கான போட்டி ஒன்று இடம்பெற்றது. தரமான குறுபடங்கள் பல அந்த நிகழ்வில் வெளியாகின. உணர்வுபூர்வமான கதையம்சம் கொண்ட படங்கள் நகைச்சுவை உணர்வுமிக்க படங்கள் புனைகதைகளை அடிப்படையாக கொண்ட படங்கள் சமூகத்திற்கான நல்ல செய்தியை வெளிக்கொண்டுவந்த படங்கள் உண்மைக்கதைகளை தளமாக கொண்ட படங்கள் ஆகிய பல குறும்படங்கள் இதில் காட்சிப்படுத்தப்பட்டு போட்டியிட்டன.
முதலில் குறிப்பிட்டதை போல நேர வரையறையை நிபந்தனையாக கொள்ளப்பட்ட இந்த போட்டியில் காட்சிப்படுத்தப்பட்ட படங்கள் அனைத்து ஐந்து முதல் எட்டு நிமிடங்களுக்குள் எடுக்கப்பட்டவையாக காண்பிக்கப்பட்டிருந்தன.
இவற்றில், சரித்திர கதை ஒன்றை அடிப்படையாக கொண்டு சூரிய பிரதாப் என்பவரால் எடுக்கப்பட்ட "சுயம்பு" என்ற குறும்படம் எனக்கு பிடித்ததாக அமைந்திருந்தது. சரித்திரத்தை திரைமொழிக்கு கொண்டுவரும்போது அதனை மூன்று மணிநேரத்தில் திறம்பட காட்சிப்படுத்தி அதில் சொல்லவந்த - சொல்லவேண்டிய - விடயத்தை இயக்குவதே மிகக்கடினமான ஒரு பணியாக இருக்கும்போது -
சரித்திர கதை ஒன்றினை குறும்படம் என்ற திரைமொழியினுள் அழகாக அடக்கி நல்லதொரு செய்தியை நேர்த்தியாக வழங்கியிருந்ததை இயக்குனரின் அசகாய முயற்சியும் அற்புதமான ஆற்றலும் என்று கூறலாம். புரட்சி என்பது அதன் நியாயமான கோரிக்கையை நிவர்த்தி செய்யப்படாமல் ஒழித்துவிட முடியாது என்ற செய்தியை, 15 ஆம் நூற்றாண்டில் சிம்மகிரிக்கோட்டம் என்ற குறுநிலத்தை ஆட்சி புரியும் கொடுங்கோல் மன்னன் விஜய காலிங்க மன்னனை எதிர்த்து போராடிய வீரத்தமிழன் சுயம்புத்தேவனின் கதையின் ஊடாக அழகாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்.
குறும்படத்துக்குரிய சகல விதிகளுக்கும் கட்டுப்பட்ட அல்லது அதன் ஊடாக முற்றுமுழுதாக திறமையாக எடுக்கப்பட்ட படம் என்று கூற முடியாவிட்டாலும் கூட, சரித்திரகதை ஒன்றினை குறைந்த வளங்களுடன் நேர்த்தியாக சொல்லியுள்ள அந்த திறன் மெச்சற்குரியது.
போராட்ட இலக்கியம் என்பது உணர்வுகளினால் உந்தப்பட்ட ஒரு அற்புத கலைவடிவம். அதனை செயற்கையாக யாரும் உருவாக்கிவிட முடியாது. அது ஒரு இனத்தின் வலிகளினாலும் வடுக்கள் நிறைந்த அனுபவத்தினாலும் பொங்கி பிரவாகப்படுபவை. உலகிலே பிறந்த பல போராட்ட இலக்கியங்கள் இலக்கிய பரப்புக்கு பல தலைசிறந்த படைப்பாளிகளை பிற்காலத்தில் வழங்கியிருக்கிறது.
அந்த வகையில், ஈழத்தின் போராட்ட இலக்கியம் வடிவெடுக்கவெடுத்து அதனை அடுத்தடுத்த தலைமுறையினர் படிக்கும்போது தமிழர்களின் வீரம் செறிந்த வரலாற்றினை அந்த படைப்புக்கள் உணர்வுடன் பிரதிபலிக்கவேண்டும். ஒரு போராட்ட இலக்கியத்தை படைக்குமளவுக்கு தமிழினத்திடமிருக்கு உணர்வுகள் அனைத்தும் அக்கினிக்குழம்புகள் எனலாம். அந்த உணர்வு தீப்பந்தங்களுக்கு குறும்படங்கள் போன்ற ஊடகங்களும் மார்க்கங்களாக அமையவேண்டும்.
0 comments:
Post a Comment