
"தமிழீழ விடுதலைப்புலிகள் தமது போராட்டத்தின் பாதையில் யாருடைய சொல்லையும் கேட்கவில்லை. அதனால்தான், இவ்வாறான வரலாற்று அழிவு இன்று தமிழ்மக்களுக்கு ஏற்பட்டது. அதன்விளைவாக இன்று தமிழர் தாயகத்தையும் தமிழ்மக்களையும் சிங்களவர்களிடம் புலிகளே தாரைவார்த்து கொடுத்துவிட்டார்கள்" - என்றதொரு கருத்துருவாக்கம் போருக்கு பின்னைய இன்றைய காலகட்டத்தில் தாராளமய எதிர்வினையாக பல்வேறு தளத்தில் பகிரப்பட்டுவருகிறது.
ஈழ விடுதலைப்போராட்டத்தில் ஏற்பட்டுள்ள பின்னடைவு, தமிழ்மக்களுக்கு ஏற்பட்டுள்ள பேரவலம், தமிழர்களின் இருப்பின் மேல் ஏற்பட்டுள்ள ஆக்கிரமிப்பு ஆகிய தளங்களின் மீது நின்று தற்கால நிகழ்வுகளை அசைபோடும் சிலரும், "அன்றைக்கே சொன்னோம் நாம் இதெல்லாம் நடக்கும் என்று" - என்று விசிலடிச்சான் குஞ்சுகளாக விடுதலைப்புலிகளை விமர்சிக்கிறோம் என்றுகொண்டு அவலை என்று நினைத்து உரலை இடிக்கும் பலரும் - சிதைந்துபோன தமிழர்கள் படையையும் அவர்களின் போராட்ட அணுகுமுறைகளையும் மேற்கண்ட விமர்சனத்திற்குள் அடக்கிவருகிறார்கள்.
இவ்வாறான விமர்சனத்தை முன்வைப்பவர்களில், இரண்டாம் வகையினரின் பிரசார இயந்திரம் முன்னரை விட 2009 மே மாதத்துக்கு பின்னர் முழுநேரமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதாவது, தென்னாபிரிக்க ஒக்டோபஸ் போல தாம் கூறியது போலவே - எவரையும் செவிமடுக்காத புலிகள் தோற்றுவிட்டார்கள் என்று கூறுவதில் இந்த வகையினர் சதா ஆத்ம திருப்தி அடைந்துகொள்கிறார்கள்.
அந்த வகையாறாக்களுக்கு ஒரு சிறு விளக்கம்.
விடுதலைப்புலிகளுக்கு எதிராக நடந்து முடிந்த போர் எனப்படுவது சர்வதேசமும் ஒருங்குசேர கங்கணம் கட்டி நின்று நடத்திமுடித்த ஒன்றாகும். இதில் விடுதலைப்புலிகள் எவரது ஆலோசனையை கேட்டாலும், அந்த படை அழிக்கப்படவேண்டும் என்பதில் வல்லரசுகள் முழு முடிவோடு நின்றன. அதற்கு காரணம், தமிழ்மக்களுக்கான விடிவு என்ற விடயத்தில் எவருக்கும் விட்டுக்கொடுக்காத கொள்கை பிடிப்பும் விடுதலைப்புலிகள் அமைப்பு தென்னாசிய அரசியல் சக்கரத்தின் அச்சாணியாக மாறியிருந்த நிலையும் ஆகும். இன்னொருபுறம், அவர்களது போராட்டம் நியாயமானதொன்று என்ற உண்மைநிலை உலகளாவிய ரீதியிலும் உணரப்பட்டது.
இவ்வாறானதொரு சூழ்நிலையில், வன்முறைக்கு பதில் வன்முறை என்ற சமன்பாட்டின்கீழ புலிகள் நடத்திய நியாயமான போரை சர்வதேசத்தினால் ஜீரணிக்கமுடியவில்லை. இந்த ஒட்டுமொத்த நிலைமையின் விளைவு எதுவென்று கேட்டால், அது உலகநாடுகள் புலிகளின் மீது அச்சம் கொண்டதாகும். அந்த அச்சத்தின் வெளிப்பாடே புலிகளின் மீது இவ்வாறு வரிசையில் நின்று சர்வதேசமும் போரிட்டு அழித்தமைக்கு முதலும் முழுமையானதுமான காரணமும் ஆகும். எதற்குமே வலுவற்ற - பெயரளவு - அமைப்பு என்று புலிகளை பார்த்து உலகம் நினைத்திருந்தால், அதனை சிங்களமே பார்த்துக்கொள்ளட்டும் என்றுவிட்டு உலகம் தன்பாட்டுக்கு இருந்திருக்கும். ஆனால், சூழ்ச்சியிலே இயங்கும் உலகின் கதவுகளை நீதிக்கைகளினால் தட்டியதன் விளைவுதான் புலிகளுக்கு ஏற்பட்ட இந்த அழிவுக்கு காரணம்.
இவ்வாறான ஒரு அழிவு ஏற்படாத வண்ணமிருக்க எவரால் ஆலோசனை கூறியிருக்கமுடியும்? புலிகள் தமது ஆலோசனையை கேட்டிருக்கலாம், கேட்டிருக்கலாம் என்று இப்போது ஆளுக்காள் சொல்வதெல்லாம், சிங்களதேசமும் சர்வதேசமும் போட்ட எலும்புத்துண்டை புலிகள் கவ்வியிருக்கலாம் என்று கூறும் ஆலோசனைகளே தவிர, தமிழர்களின் அபிலாஷைகளை புலிகள் போராடியதை விட மாற்றுவழியில் சென்று பெற்றுக்கொள்ள முன்மொழியப்பட்ட ஆலோசனைகள் அல்ல.
இல்லை, தமிழர்களின் முழுமையான அபிலாஷைகளை புலிகளை போல் அல்லாது வேறுவழியில் சென்று இலகுவாக பெற்றுக்கொண்டிருக்கமுடியும் என்று கூறும் அந்த ஆஸ்தான ஆலோசகர்கள், சிந்தனை சிற்பிகள் இப்போது தாராளமாக தமது கொள்கைகளை முன்வைக்கலாமே? புலிகளின் ஆளுமை இல்லாத இன்றைய நிலையில் - அவர்கள்கூறும் அந்த புலி அச்சம் இல்லாமல் - தாரளமாக தமிழர்களுக்கு விடிவை பெற்றுக்கொடுக்கலாமே?
துரோகிகள் என்று புலிகள் தம்மை நிந்தித்தார்கள் என்று கூறுபவர்கள் யார்? சுப்பிரமணிசுவாமியா? சோவா? அல்லது சோபா சக்தியா? சிறீரங்கன், ரியாகரன் போன்றவர்களா?
தமிழர்களின் அடிப்படைகளையே ஏற்றுக்கொள்ளாது சிங்களத்திடம் அடிபணியுமாறு ஆலோசனை கூறியவர்களும் சாதீயத்துக்கு புலிகளிடம் என்ன தீர்வு இருக்கிறது என்று வெற்று வார்த்தைகளில் விமர்சனம் பேசியவர்களும்தான் இவர்கள். இவர்கள் தமிழர்களை சிங்களவர்களிடம் கூட்டி கொடுக்க முயன்றது மட்டுமல்லாமல், சாதீயம் பேசி தமிழர்களின் மத்தியில் பிளவுகளை மேலும் அதிகரிக்க முயற்சித்தவர்களும் ஆவர். பிரதேசவாதம் பேசி தான் புலிகள் அமைப்பினால் துரத்தப்பட்டமைக்கு சப்பைக்கட்டு கட்டிய கருணாவுக்கும் இவர்களுக்கும் என்ன வித்தியாசம்? இதில் எவருக்காவது வேறு கருத்து இருந்தால் கூறுங்கள்.
மக்கள் உரிமைக்கான இராணுவ போராட்டம் ஒன்றை பகிரங்க விவாதத்துக்கு உட்படுத்த முடியாது என்பதுகூட தெரியாது, விமர்சனம் - விளக்கம் - விவாதம் என்ற தொனிகளில் புலிகளுக்கு பதிலறிக்கை விடுத்தவர்களின் தற்போதைய குறைந்த பட்ச சாதனை என்ன? இனிமேல், அவர்களின் அதிக பட்ச சாதனை எதுவாக இருக்கும்?
தாங்கள் தோல்வி அடைந்தமைக்கான காரணத்தை புலிகள் ஆராய்ந்து அறிந்து, இனிவரும் காலங்களில் அவற்றை தவிர்க்க வேண்டும் என்று விண்ணப்பமிடும் விற்பனர்களுக்கு உறுதியான வரிகளாக இதனை கூறிக்கொள்கிறேன்.
அதாவது, விடுதலைப்புலிகளின் போராட்டத்தை பொறுத்தளவில் அவர்கள் இறுதிக்கணம்வரை நடந்துவந்த பாதை மிகச்சரியானதொன்றே. வன்முறைக்கு வன்முறை என்ற பதில்முறையில் போராடினார்கள். பல்லாயிரக்கணக்கான மக்களையும் பாதுகாக்க தம்மால் இயன்ற அனைத்தையும் செய்தார்கள். தமது ஆற்றலுக்கு அப்பால் நடந்த போரிலிருந்து மக்களை காப்பாற்றுமாறு சர்வதேசத்தை இறைஞ்சினார்கள். எந்த கணத்திலும் தமது கொள்கையை விட்டுக்கொடுக்காது இறுதி மூச்சுவரை போராடினார்கள். தமது மக்களின் உரிமையை வேண்டி எந்த மண்ணிலிருந்து போராடினார்களோ, அந்த மண்ணிலேயே தமது இறுதி மூச்சையும் விட்டார்கள்.
இதைவிட, வரைவிலக்கணமான ஒரு உரிமை போராட்டத்தை இந்த உலகுக்கு தமிழினம் இனி தரமுடியாது. இதில் எங்கும் பிழையும் இல்லை.
ஆகவே, புலிகள் கடந்த காலத்தில் விட்ட பிழைகளை திருத்துகிறோம் என்று கூறிக்கொண்டு, நீதியும் வீரமும் நிறைந்த தமிழர்களது மூன்று தசாப்தகால வரலாற்றில் கறை பதித்துவிடாதீர்கள்.
8 comments:
good analysis..
it is true. We should not abuse their faith and cause. Certain group of tamils realise it soon.
Good one
இதை சொன்னால் சிலபேர் சப்பைக்கட்டு என்று நினைக்கலாம். ஆனால், 50 வருடங்களுக்கு பின்னர் எமது சந்ததி எது சரி எது பிழை என்று சரியாக எடுத்து படிக்கும். அதில் புலிகளின் அர்ப்பணிப்பு நிச்சயம் முதல் புத்தகமாகும்.
அருமையான பதிவு.
காருண்யன்
கடலூர்
சர்சைக்குரிய விடயத்தை தொட்டு, அருமையாக விவாதித்துள்ளீர்கள். எழுத்துநடை அருமை.
மருதன்
உங்களுக்கான பதிலை எனது தளத்திலேயே பதிவாக இட்டு இருக்கின்றேன்
முற்றிலும் உண்மை . சிறந்த பதிப்பு எல்லோரும் உணரவேண்டிய யதார்த்தம்
அருமையான, உண்மையான, உணரவேண்டிய பதிப்பு.
Well said.
Post a Comment