அருண்மொழிவர்மன் அவர்கட்கு,
எங்கள் இருவருக்கும் இடையிலான விவாதத்தில் நான் கூறிய கருத்துக்கள் ஒற்றப்படையான விவாதத்துக்குள் மட்டும் நின்றுகொள்ளும் காரணத்தினால் இனிமேலும் இது விடயத்தில் வாதம் புரிவதில்லை என்பதை உங்களது இறுதி ஆக்கத்தில் தெரிவித்திருந்தீர்கள். எங்களது வாதத்தில் அவரோகணத்தை ஆராதிக்கும் புள்ளியை நானும் ஆமோதித்து அதற்கு முன்னர் எனது கருத்தினை இங்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
உங்களது முதல் ஆக்கத்தில் மாற்றுக் கருத்தாளர்கள் விடும் தவறுகள், ஊடகங்கள் ஈழப் பிரச்சனையை வணிக நோக்கில் அணுகுவது, மற்றும் உண்மைக்குப் புறம்பான செய்திகளை தொடர்ந்து வெளியிடுவது, புலி எதிர்ப்பையே மாற்றுக் கருத்து என்ற அர்த்தத்தில் ஏற்றுக் கொள்வது என்ற விடயங்களை முற்றாக ஏற்றுக்கொள்கிறேன். அதில் எனக்கு எந்த முரண்பாடும் கிடையாது.
அதேவேளை, ஈழத்தமிழர்களது எதிர்காலப்போராட்டத்தை முன்னெடுத்து செல்லும் பாதையில், விடுதலைப்புலிகள் இழைத்த தவறுகளை திருத்திக்கொள்ளவேண்டும் என்ற உங்களது கருத்தினை, ஆழமாக நோக்கும்போது அதில் என்னால் உடன்படமுடியாத கூற்றினையே இப்போதும் நான் கூறவிரும்புகிறேன்.
ஏனெனில், விடுதலைப்புலிகள் மேற்கொண்ட ஆயுதவழிப்போராட்டம் ஒன்றே சிங்களத்தீவின் ஆட்சியாளர்களிடமிருந்து தமிழர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்வதற்கு சரியான வழிவகையாக அமைந்திருந்தது. இப்போதும்கூட, சிங்களதேசத்தின் நடவடிக்கைகள் அவர்களுடனான சமரசத்துக்கோ சமாதான வழிமுறைக்கோ சாதகமாக உள்ளதா, அவ்வாறெனில் இதற்கு இறுதிவழிதான் என்ன என்பவற்றை ஆழமாக நோக்கும்போது இதற்கு புலிகள்தான் சரி என்று புலி எதிர்ப்பார்களுக்கும் அசரீரி கேட்கிறது என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.
ஆகவே விடுதலைப்புலிகள் பயணித்த பாதையே தமிழர்களின் உரிமை போராட்ட வெற்றிக்கு சரியானது என்று இன்னும் பல ஆண்டுகளுக்கு பின்னரும் வரலாறு கூறத்தான் போகிறது. அதில் எனக்கு இருநூறு வீத நம்பிக்கை இருக்கிறது.
அவ்வாறான ஒரு நிலையில், விடுதலைப்புலிகள் விட்ட தவறுகளை திருத்துகிறோம் என்று கூறிக்கொண்டு தமிழர்களின் உர்மைக்காக போராடும் எதிர்கால அமைப்பு ஏதாவதற்கு "திருத்தப்பட்ட விடுதலைப்புலிகள்" என்ற பிழையான கருத்துருவாக்கத்தை கொடுத்தவேண்டாம் என்பதே எனது வேண்டுகோள். பிழைகளே விடாத தமிழர் விடுதலை அமைப்பு ஒன்று தமிழர் உரிமையை பெற்றுத்தந்தது என்ற எதிர்கால வரலாற்றை ஏழுத முடியுமானால் அதற்கு ஏற்றவாறான ஒரு அமைப்பையோ களத்தையோ அல்லது அதற்கு ஏற்ற விமர்சனத்தையோ முன்வைத்து உங்களது பணிகளை மேற்கொள்ளுங்கள்.
ஆனால், முப்பது வருடங்களாக ஒரு இனத்தின் உரிமைக்காக தன்னை வரித்துக்கொண்ட இயக்கம் இன்று அழித்தொழிக்கப்பட்ட நிலையில் அவர்கள் விட்ட பிழைகளை திருத்தி சரியான வழியில் அடுத்தகட்ட போராட்டத்தை மேற்கொள்வோம் என்று சத்திய பிரமாணம் எடுத்துக்கொள்வதெல்லாம் அந்த அமைப்பை அசிங்கப்படுத்தும் செயல்.
அத்துடன், விடுதலைப்புலிகள் அமைப்பு என்பது ஆயிரம் கெட்ட காரியங்களும் ஐந்து நல்ல காரியங்களும் செய்தது என்றுகொண்டும் அல்லது அந்த ஆயிரம் நல்ல காரியங்களையும் ஐந்து கெட்ட காரியங்களையும் செய்தார்கள். ஆனால் அந்த ஐந்து கெட்ட காரியங்களும் அந்த ஆயிரம் நல்ல காரியங்களையும் கெடுத்துவிட்டன என்றும் எடுகோள்களுடனும் உள்ளவர்கள் ஏன் அந்த அமைப்பு விட்ட தவறுகளை திருத்தி இனி புதிய பாதையில் பயணிக்கவேண்டும்.
விடுதலைப்புலிகளின் காலப்பகுதியில் அவர்களைவிட நற்பாதையில் பயணித்த வேறேதாவது அமைப்பையோ அல்லது இப்போதும் தமிழ்மக்களின் கொள்கைகளுக்கும் ஏற்றவாறாக உள்ள அமைப்பையோ பிடித்து அவை இழைத்த தவறுகளை திருத்திக்கொண்டு பயணத்தை தொடராலாமே?
அதைவிடுத்து, எதிர்கால சந்ததிக்கு வரலாறாக அமையப்போகும் ஒரு அமைப்பை திருத்தினோம் திருத்தினோம் என்று கூறிக்கொண்டு, அந்த அமைப்பு தவறுவிட்டது தவறுவி்ட்டது என்ற கருத்தினையே ஆழ வலியுறுத்தும் வலி மிகுந்த முயற்சி வேண்டாம் அருண்மொழிவர்மன். அது வரலாற்றுக்கு தவறாக இடுகின்ற அத்திபாரம்.
இதில் புலிகளால் ஆகாதது இனி ஒருவராலும் செய்யப்படக்கூடாது என்றெல்லாம் வரட்டுப்பிடிவாதம் பிடிக்கவில்லை. அது நடந்தால், அந்த மகிழ்வை துயிலுமில்லங்களில் உறங்கும் அந்த தெய்வங்களுடன் இணைந்து மகிழ்வுடன் கொண்டாடும்போது இப்படியொரு வழியில் தீர்வை எடுத்திருக்கலாமே என்று அந்த கல்லறைகளை கட்டியணைத்து அழுவோம்.
1 comments:
வணக்கம் மருதன்
இங்கு கருத்து சொல்வது சரியா இல்லை தவறா என தெரியவில்லை.
இந்த இடுகை இரண்டு நண்பர்களுக்குள் நடந்த விடயங்களை சார்ந்தது எனில் முட்டால் தனமாய் மூக்கை நுழைத்ததர்காக வருந்துகின்றேன் - மண்ணித்துவிடுங்கள்.
ஆனால்
நான் பல இடுகைகளை படிக்கும்போது மனதிற்குள் நிணைத்ததை அப்படியே சரியாக நீங்கள் குறிப்பிட்டுள்ளீர்கள்.
அந்த கடைசி மூன்று பத்திகள் மிகவும் சரியான செய்திகளை, கோணங்களை கொண்டிருக்கின்றது.
நன்றி
Post a Comment