விடுதலைப்புலிகள் தமது போராட்ட காலத்தில் இழைத்த பிழைகளை மூடிமுறைக்காது அவற்றின் மீது பகிரங்கமான விமர்சனத்தை முன்வைப்பதன் மூலம் அடுத்த கட்டத்தை நோக்கி தமிழ்மக்கள் ஆரோக்கியமாக நகரலாம் என்பது குறித்து அருண்மொழிவர்மன் எழுதிய பதிவு ஒன்றில் குறிப்பிடப்பட்ட விடயம் தொடர்பான எனது எதிர்வினைக்கு அவர் பதில் அளித்திருக்கிறார். இது மாதிரியான விவாதக்களங்கள் மக்களை புரிதல் நிலைக்கு அழைத்து செல்லும் என்ற அவரது விருப்பத்துக்கு இணங்க, அவரது பதிலுக்கு எனது எதிர்வினையை இங்கு பதிவு செய்துகொள்ள விரும்புகிறேன்.
அருண்மொழிவர்மன் தனது எதிர்வினையில் குறிப்பிட்ட விடயங்களை சுருக்கமாக இங்கு தந்தால் -
* போராட்டத்தின் தலைமையை புலிகள் வகித்திருந்தாலும் அனைத்து இன்னல்களையும் மக்களுமே சேர்த்து அனுபவித்தனர். எனவே நடந்தது நடப்பது, நடக்கப்போவது என்று ஒவ்வொரு விடயத்திலும் மக்கள் அவதானமாக இருக்கவேண்டும்.
* ஈழப் பிரச்சனையின் ஒருவர் என்ன நிலை எடுத்து நிற்கிறார் என்பதை விட அவர் எதற்காக, எந்தெந்தக் காரணிகளுக்காக அந்த நிலையை எடுத்து நிற்கிறார் என்பதில் அவதானமாக இருகக்வேண்டும். அதை விடுத்து பூம் பூம் மாடுகளை எல்லாம் பார்த்து பரவசப்பட்டதால் தான் கடந்த மே 2009ற்குப் பின்னர் யார் யார் துரோகம் செய்தார்கள் என்ற பட்டியல் இன்னமும் இன்னமும் அதிகம் நம்பியவர்கள் பெயர்களை தொடர்ச்சியாக வெளிக்கொண்டு வந்தபடி இருக்கின்றது
* போராட்டம் ஒன்றின் மூல உத்தி (strategy), தந்திர உத்தி (tactics) என்ற கருத்துக்களில் மூலவுத்தி என்பது விவாதங்களுக்கு உட்படுத்தப்பட்டு தெளிவுடன் அணுகப்படவேண்டியது.
* அத்தனை பேரும் இறப்பது என்கிற லட்சியவாத அணுகுமுறை எல்லாம் மக்களுக்கான போராட்டத்திற்கு எத்தனை தூரம் சரிவரும் அல்லது நியாயமானதாகும் என்று நினைத்துப் பார்த்தீர்களா?
என்ற கருத்துக்களின் அடிப்படையில் அவரது விளக்கம் அமைந்திருக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் சேர்த்து எனது கேள்வி ஒன்றே ஒன்றுதான். அதாவது, லட்சியத்துக்கான சத்திய வேள்வியாக புலிகள் மேற்கொண்ட போராட்டம் மிகப்பெரியதொரு சதியின் வழியால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது. சரி, இந்த தோல்வியிலிருந்து பாடம் கற்கவேண்டும் என்றும் மக்களுக்கு இனியாவது விழிப்புநிலை வரவேண்டும் என்றும் எது சரி எது நியாயம் என்பதில் இனியாவது தெளிவு வேண்டும் என்றும் தொடர் விமர்சனங்களை மேற்கொள்வதில் யாருக்கு என்ன பயன் கிட்டப்போகிறது. அல்லது இதுவரையில் யாருக்கு கிட்டியிருக்கிறது.
தமிழர்களுக்காக இன்னொரு போராட்டம் ஆரம்பமாகப்போகிறது என்ற நிச்சயம் இருந்தால், நீங்கள் முன்வைத்த வாதங்களின் மூலம் போராட்டம் தொடர்பில் அறிவார்ந்த வாதங்களை மேற்கொண்டு, புலிகள் முன்புவிட்ட சரி பிழைகளை சீர்தூக்கி பார்க்கலாம்.
தமிழர்களுக்காக அப்படியான போராட்டம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு யாராவது தயாராக இருந்தால் அவருக்கு ஆலோசனையாக இந்த திருத்தப்பட்ட தீர்ப்புக்களை கூறலாம்.( ஏனெனில் அவர் புலிகளை போலில்லாமல் மற்றையவர்களின் ஆலோசனையை கேட்கவேண்டுமல்லவா)
நீங்கள் எழுத்துக்களில் கூறும் மனக்கிடக்கைகளுக்கு நீதியான உருவம் வழங்கவேண்டும் என்று பார்த்தால் மேற்கூறியவையாக மட்டுமே இருக்கமுடியும். இல்லாவிடின், தனியே விமர்சனம் செய்கிறோம் பேர்வழிக்குள் நின்றுகொண்டு, தமிழர் போராட்ட வரலாற்றை ஆய்கிறோம் என்று கூறினால், அதன் நோக்கம் பதிவுலகில் சில நூறு பின்னூட்டங்களை பெறுவதற்கும் அல்லது அந்த விமர்சன கொத்துக்களை புத்தகமாக வெளியிட்டு பணம் சம்பாதித்துக்கொள்ளவதற்காகவுமே இருக்கும்.
இனி நீங்கள் முன்வைத்த கருத்துக்களுக்கான எதிர்வினைக்கு வருகிறேன்.
போராட்டத்தின் தலைமை புலிகளாக இருந்தாலும் பாதிக்கப்பட்டது மக்களும் சேர்த்துத்தான் என்பது உண்மை. இதனை மக்கள் இறுதிவரை ஏற்றுக்கொண்டுதான் புலிகளுடனேயே இருந்தார்கள். அவ்வாறான பிணைப்புடன் இருந்தவர்கள் 40 ஆயிரம் பேரை கொன்றுவிட்டு, புலிகளுடன் இருந்த காரணத்தினால்தான் அவர்கள் இறந்தார்கள் என்று பழியை புலிகள் தலையில் போட்டால், இதற்கு புலிகளால் என்ன நடவடிக்கை எடுத்திருக்கமுடியும்? காதலுடன் வாழ்ந்தவந்தவனின் மனைவியை கொன்றுவிட்டு, பழியை கணவன் மீது சுமத்திவிட்டு, அவனை முதலே பிரிந்து வந்திருந்தால், அவளுக்கு இப்படி நடத்திருக்காது என்று நீலிக்கண்ணீர் வடிப்பதில் என்ன நியாயம் இருக்கிறது?
விடுதலைப்புலிகளின் போராட்டம் இராணுவ போராட்டமாக அமைந்திருந்தபோதும் மூல உத்தியை விவாதத்துக்கு உட்படுத்தாமல் அவர்கள் போரிட்டிருக்கவேண்டும். ஆனால், கசப்பான உண்மை யாதெனில் போர் உச்சக்கட்டத்தை அடைந்திருந்தபோது - நீங்கள் கூறியதைப்போன்று - அவர்கள் தமது மூல உத்தியை விவாதப்பொருளாக்கி ஏனையோரின் ஆலோசனைகளையும் செவிமடுத்ததினால்தான், அவர்களுக்கு இந்த முடிவு ஏற்பட்டது. இல்லாவிட்டால், இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் மீண்டும் கெரில்லா போர்வைக்குள் சென்றிருக்கக்கூடும். புலிகள் மற்றவர்களின் ஆலோசனையை கேட்பதில்லை என்று கூறும் நீங்கள் இதனை ஏற்றுக்கொள்கிறீர்களோ இல்லையோ, இறுதிப்போரில் நடந்தது இதுதான்.
இப்படியெல்லாம் புலிகளுக்கு வக்காளத்து வாங்குவதால் உமக்கு என்ன லாபம் என்று நீங்கள் கேட்கலாம். கடந்த பதிவில் கூறியதையே நான் மீண்டும் சொல்கிறேன். நீதியும் வீரமும் நிறைந்த தமிழர்களது மூன்று தசாப்தகால வரலாற்றில் கறை பதித்துவிடாதீர்கள். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு தமிழர்களின் வீரத்தை பறை சாற்றும் அடையாளம், புலிகளது போராட்ட காலம். அதனை ஒரு தோப்பாக பாராது மரமாக பார்த்தால், உங்களைவிட அதிக பிழைகளை என்னால் கண்டுபிடிக்க முடியும்.
ஆனால், வெறிபிடித்த தும்பிகளாக நாலாபக்கமும் ஓடி ஓடி புலிகள் விட்ட பிழைகளை பட்டியல்படுத்தி, அதனை நோண்டி திரிந்தால் எதிர்கால சந்ததிக்கு தமிழர்களின் போராட்டம் தொடர்பில் தவறான விளம்பரம் ஒன்றை பதிவு செய்து செல்ல வேண்டியே வரும். ஒரு தமிழனாக அதனை நாம் செய்யலாமா?
1 comments:
Post a Comment